ஓரின செக்ஸ் ஈர்ப்பு இக்காலத்தின் தேவையா?

4272

செக்ஸுக்கும் பால் நாட்டத்துக்கும் ஒரு சின்ன, ஆனால் முக்கியமான வித்தியாசம் உள்ளது. ஓரின உறவுக்கு எதிரான சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒரு பால் நாட்டமாக நம் சமூகத்தில் ஓரின உறவுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே பிரச்சினை. ஓரின உறவு குடும்ப அமைப்புக்கு எதிரானதாக, அதனாலேயே ஒழுங்கீன மாக, பண்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாகப் பார்க்கப்படுவது ஒரு அறியாமையினால் ஏற்படுவதுதான்.

முதலில், ஓரின உறவுக்கு இயற்கை மாறானது அல்ல. பரிணாமவியல் கோட்பாடுபடி இயற்கை நமக்குள் தேவையற்ற ஓரின உறவைத் தூண்டுகிற ஒரு மரபணுவை இத்தனை கோடி வருடங்களாய் விட்டு வைக்காது. ஓரின உறவு குழந்தைப் பேறுக்கு எதிரானது என்றால் அதனால் மக்கள் தொகை குறையும்; மற்றும் ஒரு தனிமனிதனின் மரபணு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாது. இது உண்மை என்றால் அப்படியான ஒரு உயிரியல் கூறு ஏன் இன்னும் நம் உடலுக்கு உயிர்ப்பாக இருக்கிறது? ஆக, ஓரினச் சேர்க்கை விழைவால் நமக்கு ஒரு முக்கியமான பயன் உள்ளது. அது என்னவென யோசிப்போம்.

பொதுவாக ஒரு ஆண் ஒரு ஆணருகே இருப்பதை விட பெண்ணருகே இருக்கத்தான் விரும்புவான் என அறிவோம். நியூட்டனின் ஒப்புமை கோட்பாடு பற்றின விளக்கமே பெண்ணருகே இருக்கையில் நேரம் சிட்டாய் போவது குறித்த உதாரணத்தைப் பயன்படுத்துகிறது. சரி, ஆனால் நம் சமூகத்தில் ஏன் ஆண்கள், பெண்கள் தம் பாலினத்தோடு தனித்து இருப்பதற்கான இடங்களை உருவாக்கி வைத்திருக்கி றோம். ஏன் ஒரு வேலைக்காகவோ, பொழுதுபோக்குக்காகவோ கூட்டமாகச் செல்லும்போது தத்தமது பாலினத்தோடுதான் சேர்கிறார்கள்? தாராளவாத பாலுறவை அனுமதிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் மட்டுமல்ல, ஒழுக்கவி யல் அழுத்தங்களை அறியாத பழங்குடிகள் இடையே கூட பெண்கள் பெண்களோடும், ஆண்கள் ஆண்களோடும்தான் கணிசமாக இருக்க விரும்புகிறார்கள். ஆண்களுக்கு மட்டுமேயான வகுப்புகளுக்குப் பாடமெடுக்கையில் அங்கு மாணவர்கள் உணரும் சுதந்திரமும், உற்சாகமும் வேறு ஒரு நிலையில் இன்னும் தீவிரமாக இருக்கும். சில பெண்கள் வகுப்பில் இணைந்தாலே ஆண் மாணவர்களின் உடல்மொழி இறுக்கமானதாக, அழுத்தங் கொண்டதாக மாறுவதைப் பார்த்தி ருக்கிறேன். எதிர்பாலினத்தோடு இருப்பதை நாம் ரசிக்கிறோம். அதேவேளை அது ஏற்படுத்தும் கடுமையான அழுத்தம், எதிர்பார்ப்புகளை நம்மால் கொஞ்ச நேரத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனாலே நமக்கு நம் பாலினத்தோடு தனித்திருப்பதற்கான காலமும் வெளியும் கணிசமாய் தேவைப்படுகிறது.

எதிர்பாலினத்தோடு இருப்பதை விட சகபாலினத்தோடு இருப்பது இன்னும் ஆசுவாசமாக இருக்கிறது. தகராறுகள், சச்சரவுகள் குறைகின்றன, சுலபமாக வேலை செய்வது சாத்திய மாகிறது, பரஸ்பரம் இன்னும் சுலபமாக உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. திருமணமான பல ஆண்கள் வீட்டில் இருந்து தப்பிப்பது பற்றி சதா கவலைப்படுவது தன்னால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத, சமாளிக்க சிரமமான ஒரு மாறுபட்ட பிராணியை வீட்டில் தொடர்ந்து எதிர்கொள்வதில் உள்ள நெருக்கடி காரணமாகத்தான். ஆண்கள் டாஸ்மாக்கில் அடைக்கலம் தேடினால் பெண்கள் வேலையிடங்களை நாடிச் சென்று தப்பிக்கிறார்கள்.

ஆண்களுக்கு ஆண்கள்மீது வரும் வெறுப்புக்கு பெண் விருப்பம் சார்ந்த போட்டி உணர்வுதான் முதல் காரணம். அடுத்தது அதிகாரமும், படிநிலைப் போட்டியும். யார் யாருக்கு அடங்கிப் போவது என ஒரு புரிந்துணர்வு வந்ததும் ஆண்கள் கூட்டத்தில் இயல்பாகவே ஒரு அமைதி வந்து விடும். விடுதலைப்புலிகள் போன்ற இயக்கத்தில் திருமணமும், காதலும் ஆரம்பத்தில் தடைசெய்யப்பட்டதற்கு இது ஒரு காரண மாக இருக்கலாம். ஆனால் பெண்கள் மட்டுமே இருக்கும் வேலையிடங்களில் அல்லது அமைப்புகளில் மிக எளிதாக மனஸ்தாபங்களும், வெறுப்பும், கோபமும் மேலிடுகின்றன. பெண்களோடு சேர்ந்து வேலை செய்ய முடியாது எனப் பெண்களே வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். இதற்கு முக்கிய காரணம், பெண்கள் மற்றொரு பெண்ணை பாலுறவுக் கான போட்டியாக ஆழ்மனதில் கருதுவதுதான் அல்லது ஒரு பெண் தான் எங்கு வேலை செய்தாலும் அதைத் தன் குடும்பத்தின் நீட்சியாகப் பார்க்கிறாள். ஒரு அலுவலகத்தில் பெண் மேலாளராக இருந்தால் அதை ஒரு கணவனில்லாத குடும்பமாகக் கருதி மிகுந்த அதிகாரமும் கட்டுப்பாடும் செலுத்தி நிர்வகிக்க முயல்கிறாள். சதா பதற்றம் மிக்கவளாக இருக்கிறாள். பெண் விடுதலை என்றால் ஆணிடம் இருந்து விடுபடுவதல்ல; குடும்பத்தில் இருந்து தப்பிப்பது. இந்த அர்த்தத்தில் நன்றாகப் படித்த, ஆணைச் சார்ந்திருக்காத பெண்கூட மனதளவில் ஒரு குடும்பப் பெண்ணாகவே எங்கு போனாலும் இருப்பாள்.

சரி, ஆண்கள் இணைந்து சுலபமாகப் பணியாற்றுவது போல் ஏன் பெண்களுக்கு இயலுவது இல்லை? இதற்குப் பொதுவாக சொல்லப்படும் காரணம், வரலாறு நெடுக ஆண்கள் வெளி வேலைகளில் குழுவாகச் செயல்பட்டும் பெண்கள் குடும்பத்துக்குள் மட்டும் இயங்கியும் வந்திருக்கிறார்கள், பழகி விட்டது என்பது. ஆனால் இது முழுக்க உண்மை அல்ல. இணைந்து சுமுகமாக மகிழ்ச்சியாக செயல்படும் பெண்களையும் பார்க்கிறோம். எப்படி செக்ஸ் உணர்வு ஒரு குடும்பப் பொறுப்பாகப் பரிணமித்து பெண்களிடம் பொறாமையையும் வெறுப்பையும் தூண்டுகிறதோ, இதே செக்ஸ் உணர்வு அவர்களைக் குழுவாக இனிது இயங்கவும் உதவக் கூடும். ஆனால் சகபாலினத்தோர் மீதானதாக அப்போது அது இருக்கக்கூடும்.

மிகச்சிறந்த, நெருக்கமான நண்பர்களிடம் ஒரு பண்பைப் பார்க்கலாம். ஒருவர் சற்று அடங்கி, அமைதியாக இருப்பார்; இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தும், ஆவேசமானவராக இருப்பார். பொதுவாக இந்த வேதியல் மிக நுணுக்கமாக கண்ணுக்குத் தெரியாதபடி செயல்படும். இருவரும் ஆண்மை மிக்கவராக அல்லது பெண்மை அதிகமானவளாகத் தம்மைக் காட்டிக் கொள்வர். ஆனால் சிற்சில சூழ்நிலைகளில் பரஸ்பரம் அடங்கியும் ஏற்றும் நடந்து கொள்வர். இந்த உறவில் தராசு எப்போதும் ஒரு பக்கம் சாய்ந்தும் உயர்ந்துமே இருக்கும். சிறந்த தோழிகளில் ஒருவர் ஆண்மை மிக்கவராகவும் ஒருவர் பெண்மை மிக்கவராகவும் இருப்பார். இரண்டு பெண்மை மிக்க பெண்களாலோ அல்லது ஆண்மை மிக்க ஆண்களாலோ நல்ல நண்பர்களாக இருப்பது மிக மிக சிரமம்.

பொதுவாக இன்று நிர்வாகவியலிலும் உளவியலிலும் வலுவாக உருவாகி வருகிற ஒரு கருத்து பெண்களால் நல்ல மேலாளர்களாக இருக்க முடியாது, அவர்கள் தமக்குக் கீழுள்ள ஆண்களைக் கடும் நெருக்கடிக்கும், வதைக்கும் உள்ளாக்கு கிறார்கள் என்பது. ஆனால் ஒரு ஆண்மை மிகுந்த, ஆண்கள் மத்தியில் மட்டுமே தம்மை சகஜமாக உணரும் பெண்ணால் (tஷீனீதீஷீஹ்) பெண்மை மிகுந்த, உள்ளூர ஆண்கள் பால் விருப்பமும், அச்சமும் கொண்ட சம்பிரதாயப் பெண்ணை விட நல்ல மேலாளராக முடியும்.

இங்கு இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, செக்ஸை நாம் உடலுறவு மற்றும் சந்ததி உருவாக்கம் சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டும் பார்க்கக் கூடாது. இரண்டு, ஓரின விழைவுக்கு இன்றைய வேலையிடங்களில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. சம்பிரதாயமான பெண்களை விட லெஸ்பியன் உணர்வு கொண்ட பெண்கள் இன்னும் மகிழ்ச்சி யாக இணைந்து பணியாற்ற முடியும். இந்த உணர்வு நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம்.

நாம் பாலியல் ரீதியாக விரும்புகிற அல்லது ஈர்க்கப்படுகிற அத்தனை பேரையும் படுக்கைக்கு அழைக்க நாம் விரும்புவ தில்லை. ஒருவருடன் உடலுறவு கொண்டு பந்தத்தை உருவாக்குவது ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி எடுப்பதற்கு சமம். அது கணிசமான பணத்தை, ஆற்றலை, நேரத்தைக் கோருகிற ஒன்று. ஆனால் நாம் படுக்கைக்கு அழைக்காத அதேவேளை ஈர்க்கப்படுகிற நபர்களுடன் இருப்பதும் இணைந்து வேலை செய்வதும் மன அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கி றது. ஆக, செக்ஸ் என்பது 90% உடலுறவுக்கானது அல்ல; இன்று செக்ஸ் சார்ந்த உடலுறவற்ற உறவுகள் நம் சமூக உறவாடலில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகின்றன.

அதாவது உடலுறவு ஜிலேபி என்று நினைத்தால் நீங்கள் அதை மிகக் குறைவாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் நாள் முழுக்க சாப்பிடும் உணவு மற்றும் மருந்துகளில் இனிப்பு வெவ்வேறு வடிவங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. செக்ஸ் விழைவு நம் மொழியில், உரையாடல்களில், மீடியா பிம்பங்களில், இறைநாட்டத்தில், குழந்தைமீதான பிரியத்தில், கட்டிட அமைப்பில், வன்முறையில் எங்கும் பரவலாக நுணுக்கமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றைய நேரடியான ஆண் – பெண் உடல் வழியாக அன்றி இவ்வாறுதான் செக்ஸ் இனிப்பை நுகர விரும்புகிறோம்.

மனித குல வளர்ச்சி வெற்றிகரமான கூட்டு செயல்பாடுகளால் ஏற்பட்டது. நம் வகுப்புகளில் இருந்து வேலை செய்யும் இடங்கள் வரை மனிதர்களோடு எப்படி சரியாக இணைந்து செயல்படுவது என்பது குறித்தே மீள மீள அக்கறையாக சொல்லித் தருகிறார்கள். கூட்டுச் செயல்பாட்டின் எஞ்ஜின் ஆயில் செக்ஸ்தான். ஆண்கள் இத்தனை காலமாய் விவசாயத் தில், வணிகத்தில், போர்களில், கட்டுமானப் பணிகளில் கூட்டாக இயங்கி வந்திருக்கிறார்கள். இதை சாத்தியமாக்கியது ஆண்களுக்கு இடையிலான ஓரினப் பாலுணர்வுதான் என ஒரு பரிணாமவியல் கோட்பாடு உணடு.

உறவுகளைத் தீர்மானிப்பதில் உடலுக்கு ஒரு முக்கிய பங்குள்ளது. ஏன் சிலபேரைப் பார்த்ததும் பிடிக்கிறது, சிலரைக் கண்டதும் வெறுக்கிறோம்? அவர்களின் முகத்தோற்றம், பாவனை, உடல்மொழி, நிறம், குரல் இவையெல்லாம் ஒட்டுமொத்தமாகவோ தனியாகவோ ஒரு ஒவ்வாமையை நமக்குள் ஏற்படுத்துகின்றன. அலுவலகத்தில் நமக்குப் பல விநோதமான எதிரிகள் தோன்றுவது இதனால்தான். மனம்தான் உறவைத் தீர்மானிக்கிறது என்றால் நாம் கிட்டத்தட்ட யாரையும் வெறுக்க மாட்டோம். மனதளவில் நாம் கிட்டத்தட்ட ஒன்றுதான். மேலும் சுவாரஸ்யமாக உடலளவில் பிடித்துப் போகிற ஒருவரைத்தான் அணுகி மனதளவில் அறிய முயல்கிறோம். இப்படித்தான் நட்புகள் ஆரம்பிக்கின்றன. உதாரணமாக, மனதளவில் பெண்மை ஒத்த நளினமும் மென்மையும் கொண்ட ஒரு ஆணுக்கு முற்றிலும் மாறுபட்ட முறுக்கான முரட்டுத்தனமான ஒரு ஆணைக் கண்டதும் நல்ல அபிப்ராயம் ஏற்படலாம். அவருக்குத் தன்னுடைய இயல்பான பெண்மை மீது கூச்சமும் வெறுப்பும் உண்டென்றால் தன்னை ஒத்த பெண்மையான ஆணைக் கண்டால் பரம விரோதியாக பாவிக்கவோ விலகிச் செல்லவோ நேரலாம். இதன் பொருள் நெருக்கமான நண்பர்கள் ஹோமோ என்றல்ல. இவர்களின் உறவாடலில் ஓரின விழைவின் ஒரு சிறு கூறு உள்ளது என்பதே என் கருத்து.

பாலியல், இயங்கியல் முரண் பாட்டை அடிப்படையாக கொண் டது. இரு ஆண்கள் ஈர்க்கப்படும் போதும் அவர்கள் தம்மிடையே ஆண்மையும் பெண்மையும் வெவ்வேறு அளவுகளில் கொண்ட வர்களாக இருக்கிறார்கள். சரி, இது உண்மையென்றால் பெண் கள் இடையே அவஸ்தைப்படும் ஆணும், ஆண்கள் இடையே அசௌகரியமாக உணரும் பெண்களும் ஏன் இருக்கிறார்கள்? இதுதான் இங்கு மிக முக்கியமான கேள்வி. ஆண் – பெண் உறவாடலில் உள்ள சிக்கல் குழந்தைப் பேறுதான். குழந்தைப்பேறு உடமை, அதிகாரம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. உறவை இறுக்கமானதாக, சட்டதிட்டங்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக ஆக்குகிறது. இரு காதலர்கள் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதை அனுமதிக்கும் நாம் கணவன் – மனைவி ஒரே இடத்தில் வேலை பார்க்கையில் அதை எளிதில் ஏற்பதில்லை. காரணம், அவர்கள் நிர்வாகம் எனும் அமைப்புக்குள் இன்னொரு தனி அமைப்பாக இயங்குகிறார்கள். ஆனால் ஓரினச் சேர்க்கையின் முக்கிய குறையாக கருதப்படுகிற குழந்தையின்மையே இங்கு ஒரு சுதந்திரத்தை, இறுக்க மின்மையை, லகுத்தன்மையைக் கொண்டு வருகிறது. அதனா லேயே தாம்பத்ய பந்தம் போல் சிக்கலானதாக நட்பு இருப்ப தில்லை. நண்பர்களிடையே அடிக்கடி சச்சரவுகள், வன்முறை, கொலை இதெல்லாம் அன்பின் பெயரில் நடப்பதில்லை. ஆனால் காதலுக்கு இணையான தீவிரத்தன்மையும் அணுக்கமும் நட்பிலும் உருவாகிறது – இதற்குக் காரணமும் கண்ணுக்குத் தெரியாத ஓரின விழைவின் வேதியல்தான்.

இங்குதான் இரண்டாவது முடிவுக்கு வரலாம். உறவாடலைக் குடும்பம் சார்ந்ததாக மட்டும் யோசிக்கும் பாணியை நாம் கைவிட வேண்டிய வேளை வந்து விட்டது. இன்று வேலை மற்றும் வேறு நாட்டங்களுக்காக எண்ணற்ற பரிச்சயமற்ற பேருடன் உரையாடவும், சேர்ந்து இயங்கவுமான சாத்தியங்கள் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளால் ஏற்பட்டுள்ளன. இன்றைய யுகத்தில் கண்ணுக்குத் தெரியாத அந்நியர்களுடனான உரையாடலும், பரஸ்பர புரிந்துணர்வும் சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. மென் திறன் பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளுக்கு கல்லூரிகளிலும், அணி செயல்பாடு என்ற பெயரில் நிறுவனங் களிலும் இதற்குத்தான் பயிற்சி அளித்து அழுத்தம் கொடுக் கிறார்கள். ஒரு காலத்தில் குடும்ப உறவு சார்ந்த சாதிய பந்தங்கள் வழியாகத்தான் நாம் வேலைகளை அடைந்தோம், வணிகம் செய்தோம். இன்று உலகம் விரிந்து வரும் நிலையில் உறவுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணம் கிடைத்துள்ளது. தினசரி புது நபர்களை சந்திப்பதும், வலைத்தொடர்புகளை உருவாக்குவதும் வாழ்வில் நம் வெற்றியைத் தீர்மானிக்கிற காரணியாக இருக்கிறது.

சமூக வளர்ச்சி என்பது குடும்பம், மகப்பேறு போன்ற சிறுவட்டங்களைத் தாண்டிச் சென்று விட்டது. இதற்கு மற்றொரு உதாரணம், இன்று உலகு முழுக்க கணிசமாகக் குறைந்து வரும் உடலுறவும், மகப்பேறும். கடந்த வருடத்தில் மட்டும் இந்தியாவில் மலட்டுத்தன்மையின் அளவு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய தம்பதியினரிடையே உடலுறவில் ஆர்வம் இழப்பு குறித்த ‘இந்தியா டுடே’ கட்டுரையில் ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பு வருகிறது. உடலுறவு இன்மைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய தொடர்பு இருப்ப தாகக் கட்டுரை கூறுகிறது. மனிதர்கள் சமூக, பொருளாதார ரீதியாகப் பெரும் முன்னேற்றங்கள் அடைகையில் செக்ஸை மகப்பேறுக்கான ஒரு சம்பிரதாயமாக எண்ணாமல் ஒரு பொழுதுபோக்கு கேளிக்கையாக மாற்ற விழைகிறார்கள். இந்த செக்ஸ் கேளிக்கையைப் படுக்கையறை வழியாக அன்றி வேறு பல கலாச்சாரப் பொழுதுபோக்குகள், விருப்ப நிறைவேற்றல்கள் வழி அடையவே விரும்புகிறார்கள். உதாரணமாக, ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வாங்குவது மிக அழகான பெண்ணைப் புணர் வதை விட கிளர்ச்சியானதாக, கிளுகிளுப்பானதாக இன்று பார்க்கப்படுகிறது.

இன்று இந்தியாவில் செக்ஸ் உறவு கொள்ளாத தம்பதியினர் அதிகமாகி வருகிற தகவலும் நமக்குத் தெரியும். பிரம்மச்சரிய தம்பதியினர் என இவர்களுக்கு என்று ஒரு பெயரே உள்ளது. இன்றைய தம்பதியினர் ஒன்று செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை அல்லது குழந்தைப்பேறை வெகுவாகத் தள்ளிப் போடுகிறார்கள். காரணங்கள் நேரமின்மை, களைப்பு, ஆர்வமிழப்பு, தகவல் தொடர்பின் பெருக்கம் என பலவாறு கருதப்பட்டாலும் இவை வெறும் சப்பைக்கட்டுதான். முக்கியமான காரணம், இரண்டும் அவசியம் அல்ல என்கிற எண்ணம் சமகாலத்தில் வலுப்பெற்று வருகிறது.

கணிசமான ஜோடிகள் திருமணம் செய்து பெயருக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அன்றி உடலுறவு, சந்ததி நீட்டிப்பு என்கிற நோக்கத்தில் இருந்து குடும்ப அமைப்பு வெகு வாக விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. குடும்ப அமைப்பு அடிப்படையில் குறுகுதலை வேண்டுவது. ஆசைகளை, விருப்பங்களை, செக்ஸைக் குறுக்கி ஆற்றலை மொத்தமாக உறவுகளின் பேரில் செலவழிப்பது. ஆனால் இன்றைய காலகட்டம் நம்மை ஒரு சப்பாத்தியைப் பரத்துவது போல முழுக்க விரித்துக் கொள்ளக் கேட்கிறது. வேலை செய்வது, தொடர்ச்சியாகப் பயணிப்பது, குலம் கோத்திரம் கடந்த உறவுகளை உருவாக்குவது, பணம் சம்பாதிப்பது, பொருட்களை வாங்கிக் குவிப்பது, அதிகாரத்தை அடைவது, அது குறித்த கனவுகளில் மூழ்குவது, தீரத்தீர ஆசைகளைத் தேடித்தேடி நிறைவேற்றுவது, கட்டற்ற இன்பத்தைத் தேடுவது என இன்றைய காலத்தின் போக்கு குடும்பம் எனும் குவிமையத்தில் இருந்து சிதறிப் போவது. காலத்தின் திசையை நாம் மாற்ற முடியாது. எதிர்கால மனிதன் செக்ஸ் அற்றவனாகக் கூட இருக்கலாம். அவனுக்கு ஓரின உறவுகளே அதிக சௌகரியமாகக் கூட இருக்கலாம். இந்த முடிவை நோக்கிய பண்பாட்டு அசைவுகளைத் தாம் இப்போது கண்டு வருகிறோம். இதைப் புரிந்து கொள்ளாதவர்களே இயற்கையான செக்ஸ் குறித்தும், குடும்பத்தின் பவித்திர தன்மை பற்றியும் ஓரின சேர்க்கைக்கு எதிராக ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடலுறவும், குழந்தைப்பேறும் குறைவதற்கான காரணம் மனிதனின் அக்கறை இதைக் கடந்து போய் விட்டது என்பதே. இது ஒரு சமூக, பொருளாதாரம் சார்ந்த பண்பாட்டு சுழல். இந்தச் சுழலில் சிக்கி புலன்வழி உலகை மேலும் மேலும் அறிவதற்கான விருப்பம் இன்றைய மனிதனுக்கு மிக அதிகமாகி உள்ளது. செக்ஸ் இன்றியே குழந்தைப்பேறு இன்று சாத்தியமாகி பரவலாகி வருவதும் இன்னொரு காரணம். ஒரு பண்பாட்டுப் போக்கு மனித குலத்தின் உள்ளார்ந்த இச்சை, சமூக பொருளாதார வீச்சை அடிப்படையாக கொண்டது. ஓரினச் சேர்க்கையை எதிர்க்கும் வலதுசாரிகள் இதே கோளாறான அணுகுமுறையைத்தான் நவீன முன்னேற்றங்கள் மற்றும் விழுமியங்களுக்கு எதிராக வைக்கிறார்கள். நாம் காலத்துக்குள் இருக்கிறோம், காலத்தில் இருந்தபடியே காலத்தை மாற்ற நினைப்பது காருக்குள் இருந்தபடியே காரைத் தள்ளுவதைப் போன்றது என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ராமர் ஆட்சியை, காமராஜர் ஆட்சியை வேண்டுவோர்தான் ஓரினச் சேர்க்கையையும் எதிர்க்கிறார்கள்.

மனிதர்கள் பண்படாத வனவாசிகளாக இருந்த காலத்தில் கூட்டாக ஆண்கள் வேட்டையாடவும் போரிடவும் ஒரு இணைப்பு பாலமாக ஓரின ஈடுபாடு இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் மனிதர்களை எந்திரம் போல் வேலை வாங்கி உபரி மதிப்பு பணமாக, சொத்தாக மாற்றும் இறுக்கமான நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவானதும் உடல் சொத்தின் நீட்சியாகப் பார்க்கும் போக்கு உருவானது. செக்ஸ் அளக்கப்பட்டு கறாராகப் பரிந்துரைக்கப்பட்டது. படிநிலை தக்க வைக்கும் பொருட்டு குடும்பத்துக்கு மிகுதியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனாலேயே செக்ஸில் ஆண்-பெண்ணுக்கு இடையிலானது மட்டுமே சரியானது, உத்தமமானது என வலியுறுத்தப்பட்டது. சுயபுணர்வு, வயதில் குறைந்தவர்கள், மூத்தவர்கள், ஒருபாலினத்தவர் மீதான இச்சைகள் ஒடுக்கப்பட்டன. இன்று மீண்டும் எதேச்சையாக வரலாற்றில் ஒரு உடைப்பு நேர்ந்திருக்கிறது. உலகுதழுவிய உரையாடலை நோக்கியும், இனம் கடந்த பண்பாட்டு பகிர்தல்கள் நோக்கியும் உலகம் விரையும் இவ்வேளையில் குழந்தைப்பேறு கடந்த ஒரு செக்ஸ் உறவாடலுக்கான தேவை கனிந்துள்ளது.

இருபால் உறவு எப்படிக் கடந்த காலத்துக்கான மார்க்கமோ அதேபோல் ஓரினச்சேர்க்கை இக்காலத்து உறவாடலுக்கு உதவுகிற ஒன்று என நாம் புரிந்துகொள்ளும் அவசியமும் எழுந்துள்ளது. நாம் இன்னொரு காலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். அதை உணராதவர்கள்தாம் இயற்கைக்கு மாறானவர்கள்.