தமிழ் பெண்களின் முதல் உறவு எப்படி இருக்கும் தெரியுமா?

1721

குதூகலமாகத் தேனிலவுக்குப் பயணப்பட்ட சங்கர்-ரேவதி ஜோடி சென்ற வேகத்தில் ஊர் திரும்பியது. எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுந்த இருவரையும் குடும்பத்தினரால் விசாரிக்கவோ சமாதானப்படுத்தவோ முடியவில்லை. ஆனால், புதுமணத் தம்பதி இடையே இணக்கம் கெட்டிருந்தது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

குடும்ப மருத்துவரே உறவினராகவும் இருந்ததால், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியை அவர் மேற்கொண்டார். கணவனுக்குப் பால்வினை நோய் இருக்கலாம் என்ற ரேவதியின் சந்தேகத்தை அறிந்ததும் சங்கர் குடும்பத்தினர் குதித்தனர். தேனிலவு தருணத்தில் உடல் அளவில் ரேவதி எதிர்கொண்ட சிரமங்களால் அவளுக்கு அந்தச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ரேவதியின் சிறுநீர் பரிசோதனையின் முடிவு கைக்கு வந்ததும் பிரச்சினைக்குக் காரணம் சங்கரோ ரேவதியோ அல்ல என்றும் தேனிலவும் அவர்களுடைய ஈடுபாடற்ற நெருக்கமுமே காரணம் என்றும் குடும்ப மருத்துவர் சொன்னார். விஷயம் விளங்கியதும் சமாதானமான ரேவதி, இரண்டாம் தேனிலவுக்குக் கணவனுடன் கிளம்பிப் போனாள்.

அலைக்கழிக்கும் அழற்சி

இனிமையான தருணங்களுக்கும் உவப்பான அனுபவங்களுக்கும் காரணமாக வேண்டிய தேனிலவு இது போன்று கசப்பான அனுபவத்துக்கும் காரணமாகக்கூடும். திருமணமான புதிதில் உறவில் திளைக்கும் தம்பதியருக்கு ‘ஹனிமூன் சிஸ்டைடிஸ்’ (Honeymoon Cystitis) எனப்படும் தேனிலவு பருவத்து அழற்சிகள் ஏற்படுவது இயல்பு. சிறுநீர்ப்பையைப் பாதிக்கும் இந்த அழற்சியால் அவசரமாகவும் அடிக்கடியும் சிறுநீர் கழிக்கும் உந்துதல், கலங்கலான சிறுநீர், சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், வலி, நடுக்கம் ஆகியவற்றுடன் சிலருக்குக் காய்ச்சலும் வரலாம். ஆண், பெண் இருவருக்குமே இந்த அழற்சி பொதுவானது என்றாலும் உடல்வாகின் இயல்பால் பெண்களே அதிகமாக அவதிக்கு ஆளாகின்றனர்.

சுத்தம் சுகம் தரும்

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆர்.சேகர், “பெண்ணின் உடலமைப்பில் சிறுநீர்த் துவாரம், ஜனனப் புழை, ஆசன வாய் ஆகிய மூன்றும் அருகருகே அமைந்திருப்பதால் ஒன்றில் ஏற்படும் சுகாதாரக் கேடு மற்றொன்றை எளிதில் பாதிக்கிறது. திருமணமான புதிதில் தம்பதியரின் வரம்பற்ற நெருக்கத்தால் பெண் தனது சுத்தம், சுகாதாரப் பேணலில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாகிறது. இதில் கவனக் குறைவு ஏற்பட்டால் சிறுநீர்த் தாரையின் வழியாக பாக்டீரியா தொற்று ஏற்படும். சிறுநீர்ப் பைக்கும் சிறுநீர்த் தாரைக்குமான தொலைவு பெண்ணைவிட ஆணுக்கு அதிகம் என்பதால், பாக்டீரியத் தொற்றால் ஆண்கள் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்ணின் சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றால் அவர் உணரும் வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சிரமங்கள் தம்பதியின் நெருக்கத்துக்குத் தொந்தரவாக மாறும். சில பெண்களுக்கு அடிவயிறு, கீழ் முதுகுப் பகுதிகளிலும் வலிக்கும். உடற்கூறு மற்றும் பாலியல் அறியாமையால் சில தம்பதி இந்தத் தொந்தரவைப் பால்வினை நோயாகத் தவறாக நினைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகும் தொந்தரவு நீடித்தால் மருத்துவ உதவி பெற வேண்டும். ஹனிமூன் சிஸ்டைடிஸ் தொந்தரவுகளைச் சாதாரண சிறுநீர் பரிசோதனை மூலமே உறுதிசெய்துகொள்ளலாம். அலட்சியம் காட்டினால், பாக்டீரியா தொற்று சிறுநீரகத்தைப் பாதித்து, நீடித்த உபாதைகளை ஏற்படுத்திவிடும்” என்கிறார்.

தவிர்ப்பது எப்படி?

புதுமணத் தம்பதி தங்கள் உடலின் தூய்மைக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பது இருவரின் ஆரோக்கியத்துக்கும் உறவின் இனிமைக்கும் அடிப்படை. இந்த இனிமையே இருவருக்குமிடையே நெருக்கத்தை வளர்க்க உதவும். அதற்காக வாசனை திரவியங்கள், கடும் சோப்புகள், களிம்புகள் என ரசாயனங்கள் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தத் தேவையில்லை. வழக்கமான குளியல், அமிலத்தன்மை குறைந்த சோப்பு போன்றவையே போதும். உறவுக்கு முன்னும் பின்னும் இதைச் செயல்படுத்தலாம். மேலும், இந்த இரண்டு நேரத்திலும் சிறுநீர் கழிப்பது அதன் பாதையிலிருக்கும் கிருமித் தொற்றை அகற்ற உதவும். காபி, சோடா, மென்பானங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றைக் குடிக்கலாம். போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். பருத்தி உள்ளாடைகள் அணிவதும் அவற்றைத் தேவையானபோது மாற்றுவதும் நல்லது. இறுக்கமான ஆடைகளையும் ஜீன்ஸ் போன்ற கடின துணி வகைகளையும் தவிர்ப்பது நல்லது.

கணவன் தோள் பத்திரம்

தேனிலவு பாதிப்புகளில் கணவனின் தோளை மனைவி பதம்பார்க்கும் ‘ஹனிமூனர்ஸ் பால்ஸி’ என்பதும் அடங்கும். புதுமணத் தம்பதியரின் குலாவலில் தோளுக்கும் மடிக்கும் முக்கியப் பங்குண்டு. ‘அதிலும் தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று கணவனின் தோளில் சாய்ந்திருப்பது புது மனைவிக்கு அலாதி தருவது. அதிலும் உறங்குகையில் கணவனின் தோளே மனைவிக்குத் தலையணையாகும். ஆனால் நாளின் மூன்றில் ஒரு பகுதி நேரம் ஆணின் தோள் நரம்புகள் தொடர்ச்சியான அழுத்தத்துக்கு ஆளாகும்போது, கை விரல்களில் வலி ஏற்படும். வாதத்துக்கான பாதிப்போடு செயல்பாட்டில் நீண்டகாலச் சிரமங்களையும் ஏற்படுத்திவிடும். இந்த நரம்புப் பாதிப்பையே ‘ஹனிமூன் பால்ஸி’ (Honeymoon Palsy) என்கிறார்கள். எனவே, தோள் உபயோகத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

தேனிலவின் வேறு உபாதைகள்

இவை தவிர்த்தும் புதுமணத் தம்பதியின் தேனிலவைக் கசப்படையச் செய்யும் பிரச்சினைகள், பொருத்தப்பாடின்மைகள் பல எழக்கூடும். ஆண் – பெண் இடையிலான மோகத்தின் வேகம் ஒரே மாதிரியாக அமையாதது, ஆணைத் துவளச் செய்யும் துரிதம், அடுத்தடுத்த கூடலுக்கு ஆசையிருந்தும் அதற்கு இடங்கொடாத செயல்பாட்டுத் தடைகள், பெண் உணரும் அசூயைகள், தொடக்கத் தடுமாற்றங்கள் என உடல் சார்ந்து பலவும் ஏற்படுவது இயல்பு. இந்த உடல் சார்ந்த பிரச்சினைகளைப் போன்றே தேனிலவு காலத்துக்கான மனம் சார்ந்த பிரச்சினைகளும் எழுந்து மறையும். பெண்ணுக்குக் கூடலில் போதிய ஆர்வம் இல்லாதது மற்றும் தயக்கம், ஹார்மோன் சமமின்மை காரணமாக விருப்பமிருந்தும் தூண்டல் அடையாதது, பெண்ணின் வலி குறித்த அச்சம், கண்டது கேட்டது என அனைத்தையும் அரங்கேற்றத் துடிக்கும் ஆணின் அவசரம், பாலியல் அறியாமை எனப் பலவும் எதிர்ப்படக்கூடும்.

திருமணத்துக்குப் பிறகான ஆரம்ப மாதங்களைத் தம்பதி சோதனை முயற்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது எதிர்ப்படும் தடுமாற்றங்களையும் சிரமங்களையும் பெரிய சங்கடமாக வரிந்துகொள்ளக் கூடாது. முன்கூட்டியே பேசித் தெளிவது, சிறு சங்கடங்களைப் பெரிதுபடுத்தாதது, தேவையென்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது ஆகியவை புதுமணத் தம்பதியின் சந்தேகங்களைப் போக்கி, தேனிலவை இனிமையாக்கும்.